×

கட்சி தலைவர் பதவியை விட்டு நான் நீக்கப்பட்டேனா?: மன்சூர் அலிகான் ஆவேசம்

சென்னை: இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற கட்சியை தொடங்கி, அதன் தலைவராக நடிகர் மன்சூர் அலிகான் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை வளசரவாக்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு அளிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது என்றும் முடிவானது. இதையடுத்து, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்படுவதாக செயற்குழு முடிவெடுத்துள்ளது.

கட்சி தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆவேசம் அடைந்த மன்சூர் அலிகான், இன்று அளித்துள்ள விளக்கம் வருமாறு:இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற இயக்கத்துக்கு பொதுச்செயலாளராக குன்றத்தூர் பாலமுருகன்தான் இருக்கிறார். கண்ணதாசன் என்பவர், மூத்த சங்க உறுப்பினர் செல்லப்பாண்டியனால் ஆபீஸ் பாய் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். மேலும், 100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களை படம்பிடித்து கட்சியில் சேர்ந்ததாக காட்டியும், அப்போது, ‘உடன் வருகிறேன் அண்ணா’ என்று வந்தும் பயன் பெற்றார்.

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற சட்டை அணிந்து வந்ததை கண்டித்தேன். மேலும், இலங்கைக்கு யாரையோ அனுப்ப வேண்டும். ஒரு லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டார். சமீபத்தில் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப், ₹70 ஆயிரம் மதிப்புள்ள புதிய லேப்டாப்பை திருடிச் சென்றுவிட்டார்.அவர் சேர்த்த உறுப்பினர்களை விடுவித்து, புதிய உறுப்பினர்களைக் கொண்டு மீள்மனு செய்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் வாங்கிவிட்டோம். எனவே, அவரைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். இதனால்தான் தமிழனை யாரும் வேலைக்கு வைப்பதில்லை போலும். நான் ஆரணி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் ஆதரவு திரட்டி வருவதால், அதிக வேலைப்பளுவுடன் இருக்கிறேன். எனவே, உறுப்பினர்கள் யாரும் அவர்மீது கோபம் கொள்ள வேண்டாம். இவ்வாறு மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

The post கட்சி தலைவர் பதவியை விட்டு நான் நீக்கப்பட்டேனா?: மன்சூர் அலிகான் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Mansoor Alikhan ,CHENNAI ,Mansoor Ali Khan ,Democratic Tigers of India ,Valasaravak, Chennai ,
× RELATED ஜனநாயகப்புலிகள் கட்சியை...